siruppiddy

1/7/13

முன்னாள் ஜனாதிபதிக்கு செக் வைக்கும் மஹிந்த!


 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
   கட்சிக்குள் இன்னொரு குழுவை அவர் உருவாக்க முயற்சிப்பது மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான நிலைப்பாடு போன்றன தொடர்பிலேயே இவர் மீது  ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
   சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில சிரேஷ்ட அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கேட்டுக் கொண்டதற்கு அமையவாகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
  13 ஆவது திருத்தம் தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது ஸ்திரமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள நிலையில், கட்சியின் ஆலோசகரான சந்திரிகா பண்டாரநாயக்க, அந்த நிலைப்பாட்டுக்கு மாற்றமான முறையில் கருத்துகளை வெளியிட்டுள்ளமை, அவரின் கருத்துகளை ஒட்டியதாக சில அமைச்சர்களும் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதியை இரகசியமாகச் சந்தித்துக் கலந்துரையாடியமை தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்தவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
  முன்னாள் இராணுவத்  தளபதி சரத் பொன்சேகாவுடன், சந்திரிக்கா கூட்டுச் சேர்ந்து நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக