siruppiddy

8/7/13

தேர்தலை இலக்கு வைத்து அரசியல் பித்தலாட்டம்?



சிங்கள மீனவர்களை வெளியேற்றக்கோரி போராட்டம்! உள்ளுர் சுதந்திரக்கட்சி பிரபலங்கள் ஆதரவு!!
அரசாங்கம் VS அரசாங்கம் - மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் பித்தலாட்டம் ஆரம்பம்:-
 முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் 600 க்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரியும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்யக் கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று; உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு எதிரே ஆரம்பமாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் சி.அருள்ஜெனிபேர்ட் போராட்டத்திற்கான கோரிக்கைகள் பற்றி பிரஸ்தாபிக்கையில்   'தொடர்ந்தும் எமது பகுதியில் உள்ள மீன்களை அத்துமீறி தென்பகுதி மீனவர்கள் பிடித்துச் செல்கின்றனர். இது குறித்து பலமுறை உரியவர்களிடம் முறையிட்டும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. இதனாலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க முடிவுசெய்தோம். மாத்தளன் தொடக்கம் கொக்கிளாய் வரையிலான கரையோரப் பகுதி மீனவர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.   போராட்டத்தின் முடிவில் மாவட்ட செயலகத்தின் ஊடாக கடற்றொழில் அமைச்சருக்கும், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தளபதிக்கும் எமது கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்படவுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
'படையினரின் துணையோடு நாயாற்றில் தென்பகுதி மீனவர்கள் குடியேற்றப்பட்டு இத்தகைய அத்துமீறிய மற்றும் சட்டவிரோத மீன்பிடிகளில் ஈடுபடுகிறார்கள். அதனை நிறுத்துமாறு கோரியே முல்லைத்தீவு இராணுவத் தளபதிக்கும் மனுவை கையளிக்கின்றோம்' எனத் தெரிவித்தார்.
எனினும் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள மூவர் படைத்தரப்பினால் உருவாக்கப்பட்டுள்ள  முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளன பிரமுகர்கள் ஆவர். எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வெற்றியிலையில் இவர்கள் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்  மீனவ சமூகத்தின் ஆதரவை திரட்டும் வகையிலேயே அவர்கள் இப்போராட்டத்தை அறிவித்துள்ளதாக நம்பப்படுகின்றது.
கோரிக்கையிலுள்ள நியாயத்தன்மையினை கருத்தில் கொண்டே தாம் ஆதரவு வழங்குவதாக பெரும்பாலான மீனவ சங்கங்கள் தெரிவித்தன. எனினும் சுயாதீனமாக செயற்பட்டுவரும் பல மீனவ அமைப்பு பிரமுகர்கள் போராட்டத்தின் பின்வரிசை பங்காளராகவேயிருந்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக